×

டெல்லி போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை: சாலை மறியலை அடுத்து பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு

டெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று நாடு முழுவதும் ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. ஏற்கெனவே அறிவித்தப்படி டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் போராட்டம் நடைபெறவில்லை. விவசாயிகளின் இந்த போராட்டத்தையொட்டி டெல்லி எல்லையான சிங்கு, காஜிபூர், டிக்ரி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இணையசேவையும் முடக்கப்பட்டன. போராட்டங்கள் அமைதியாக முடிந்தது. இந்நிலையில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், விவசாயிகளின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று தாத்ரியில் இரண்டாவது முறையாக நடக்கும் மகாபஞ்சாயத்தில் (அனைத்து ஜாதி தலைவர்களுடனான ஆலோசனை) உரையாற்றுகிறார். அந்த கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்களும் பங்கேற்கின்றனர். முன்னதாக கடந்த 3ம் தேதி, அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் முதல் மகாபஞ்சாயத்து கூட்டத்தில் விவசாயிகள் மத்தியில் பேசினார். இதனிடையே டிக்ரி பகுதிகளில் போராடிய அரியானா மாநிலத்தை சேர்ந்த 52 வயதான விவசாயி ஒருவர் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் மத்திய அரசு பிடிவாதம் காட்டி வருவதால் வேதனை அடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. கடும் குளிர் உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை 6 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

The post டெல்லி போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை: சாலை மறியலை அடுத்து பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் டி20 தொடர்; டெல்லியை வீழ்த்தி...